ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவிப்பு - சிஎஸ்கே வழங்கிய புதிய பொறுப்பு  

bravo

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் மேற்கிந்திய வீரர் டுவைன் பிராவோ போட்டியில் விளையாடி வருகிறார். 2017 ஆண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த சீசனில் மட்டும் பங்கேற்காத பிராவோ 2008 முதல் 2010 வரை மும்பை அணிக்கா விளையாடினார். இதன் பிறகு 2011 ஆண்டு நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட பிரவோ தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்தியளவில் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு வந்தது முதல் அவரது ஆட்டத்திறன் பலராலும் பாராட்டப்பட்டது. முக்கியமான கட்டத்தில் கேப்டன் டோனிக்கு பக்கபலமாய் இருந்து அணிக்கு சிறப்பான பங்களித்துள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த பிராவோவின் உடல்மொழிகள்

இதுவரை மொத்தமாக 15 ஐபிஎல் சீசனில் விளையாடி இதுவரை 153 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் பேட்டிங்கிலும் கலக்கி வரும் பிராவோ 15 சீசனில் விளையாடி 1560 ரன்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு சீசனிலும் ஆல் ரவுண்டராக ஜொலித்த பிரவோ போட்டியின் போது களத்தில் நடனமாடி ரசிகர்களை மகிழ்விப்பார். விக்கெட் எடுக்கும் போதும், கேட்ச் பிடிக்கும் போதும் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழிகள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்யும். 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் டி20 உலக கோப்பையை வென்ற மேற்கிந்திய அணியில் இடம் பிடித்து அத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இதன் பிறகு சர்வதே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த பிராவோ தொடர்ந்து ஐபிஎல் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்று வந்துள்ளார். இந்நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வுப் பெறப்போவதாக பிராவோ அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராவோ, வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஓய்வு பெற முடிவெடித்துள்ளதாகவும், கூறியுள்ளார். 

சிஎஸ்கே நிர்வாகம் வழங்கிய புதிய பொறுப்பு

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தொடரவுள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராவோ, சிஎஸ்கே அணியில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போது எனக்கு அளிக்கப்பட்டிருந்து பொறுப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் தொடர்ந்து ஐபிஎல்லில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள் அவரது பதிவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.