12 மணி நேர வேலை சட்ட மசோதாவில் திருப்புமுனையா?  

12

12 மணி நேர வேலை சட்ட மசோதா

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில், தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இந்த சட்டம் கொண்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தொழிற்சாலைகள் திருத்த சட்டம் தொழிலாளர்களின் விருப்ப தேர்வாகவே இருக்கும் என்றும், இது கட்டாயம் அல்ல என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். 

அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அன்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது; தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்ததற்காக இதை கொண்டு வரவில்லை, குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும். தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் அமல்படுத்தப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என்று தெரிவித்திருந்தார்.

கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு 

இந்தநிலையில், அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட கட்சிகள் அமைப்புகள் என இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பற்றி தமிழ்நாடு முழுவதும் தற்போதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. 12 மணி நேர வேலை மசோதாவை வாபஸ் பெற மேற்குறிப்பிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். 

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை வாபஸ் பெற முடிவு?

இந்தநிலையில், தற்போது 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் இந்த சட்ட மசோதாவை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு என தகவல் வெளியாகி இருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறதா என்று கேள்வி எழுகிறது. இன்று மாலை கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானநிலையில், தற்போது இந்த தகவலானது வெளியாகி இருக்கிறது. 12 மணி நேர வேலை சட்ட மசோதா இன்னும் ஆளுநருக்கு அனுப்பவில்லை என்கிற அடிப்படையில், இந்த மசோதாவை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மசோதா தொடர்பாக தமிழ்நாடு அரசு எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.