இந்த ஆண்டில் மட்டும் இத்தனை லட்சம் கார்கள் திருட்டா? -விழிபிதுங்கும் காவல்துறை

Car Theft

அமெரிக்காவில் இந்த 2022ம் ஆண்டு மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குற்றப்பிரிவு தகவல் அளித்துள்ளது. 

அமெரிக்காவில் அதிகரிக்கும் கார் திருட்டு

அமெரிக்காவின் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 7,45,000 கார்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஓர் ஆண்டின் முதல் 9 மாதங்களில் திருடப்பட்ட கார்களில் இது 24% அதிகம் என தெரிவித்துள்ளது. இதுவரை திருடப்பட்ட கார்களின் மதிப்பு சுமார் 6.6 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 54.66 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

குற்றத்தை நிரூபிப்பது கடினம் 

கார் திருட்டு சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த காவல் அதிகாரி ஒருவர், அதிகாரப்பூர்வமாக புகாரளிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையே பத்து லட்சத்தை தாண்டுவதாகவும், புகார் அளிக்கப்படாத கார் திருட்டையும் சேர்த்தால் இதன் எண்ணிக்கை இன்னும் உயரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த, சிக்காகோ மாகாணத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி திரு வெயிட்சல் அவர்கள், கார் திருட்டு சம்பவத்தை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளார்.கார் திருடப்படும்போது நேரடி சாட்சியமோ அல்லது வீடியோ ஆதாரமோ இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியும் இல்லையென்றால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுவர் என தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு அதிகாரி, 1990 முதல் 2010 வரையிலான கால கட்டத்தில் கார் திருட்டு சமபவங்கள் குறைந்து வந்ததாக கூறினார். ஆனால் கொரோனா காலமான 2020 ஜூன் மாதத்திற்கு பிறகு கார் திருட்டு சம்பவங்கள் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார், மேலும் கிராமப் புறப் பகுதிகளிலேயே அதிக அளவிலான கார் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

தீர்வு என்ன? 

மேலும் கார் திருட்டு சம்பவங்களை குறைக்க வேண்டுமானால், இந்த குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்த அதிகாரி, குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தால் மட்டுமே கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறையும் என தெரிவித்தார்.