டெல்லியில் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.. சென்னையில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடக்கம்.!

fchc

டெல்லியில் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க கோரி இபிஎஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிவில் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, உங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவிட முடியாது என்று நீதிபதி உத்தரவாதம் அளித்திருந்தனர். 

இதற்கு எதிர்வாதமாக, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக தேர்தல் நெருங்குவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதி ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இன்று விசாரணைக்கு வந்த இபிஎஸ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க 10 நாள் அவகாசம் வழங்கி வழக்கை முடித்து வைத்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். 

சென்னையில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடக்கம்

இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சபீக் அமர்வில் விசாரணை தொடங்கியுள்ளது. 

விசாரணையில், அனைத்து தரப்பினரும் இறுதி விசாரணை 20-ம் தேதி ஒப்புக்கொண்ட நிலையில், ஏன் மேல்முறையீடு என ஓபிஎஸ் தரப்பை கேள்வி எழுப்பினர். அதற்கு, 16-ம் தேதி செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதால் முன்கூட்டியே விசாரிக்க கோரிக்கை வைத்தோம் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீக்கத்தை எதிர்த்து வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கர்நாடக தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அதிமுக தொடர்பான வழக்கை முடித்து வைப்பதற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருதரப்பினரும் முனைப்புக் காட்டி வருகிறார்கள். விசாரணையின் தீர்ப்பு என்னவாக வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.