குஜராத்தை வீழ்த்தி  5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை

csk won ipl 2023

ஐபிஎல் திருவிழா

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.  இந்தாண்டு நடைபெற்ற 16 வது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்றது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில், முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் விளையாடும், அதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியும் முதல் தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோத வேண்டும். இதில், வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் விளையாடும் என்பது விதி. அதன்படி, நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் - குஜராத் டைடன்ஸும் மோதின.

சென்னை பந்துவீச்சை சிதறடித்த சாய் சுதர்ஷன்

அகமதாபாத் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய குஜராத்தின் தொடக்க வீரர்கள் சாஹா - கில் ஆரம்பத்திலேயே அதிரடியில் இறங்கினர். சென்னையின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட சாஹா அரைசதம் அடித்தார். 54 ரன்கள் இருந்தபோது அவர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரான ஷுப்மன் கில்லையும் கேப்டன் தோனி அற்புதமாக ரன் அவுட் செய்ய ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது.

அடுத்து களமிறங்கிய தமிழ்நாட்டின் சாய் சுதர்சன் சென்னையின் மகிழ்ச்சியை தகர்த்தார். களத்தில் விஸ்வரூபமெடுத்த சுதர்ஷன் சென்னையின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி எதிர்பார்த்ததை விட ரன்களை குவித்தது. 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்த சுதர்ஷன் பத்திரான பந்து வீச்சில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடனும் ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.


குறுக்கிட்ட மழை

இதன் பிறகு மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக  மழை பெய்ததால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் டக் வொர்த் லீவிஸ் விதிப்படி சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


அதிரடி காட்டிய சென்னை வீரர்கள்

இதனையடுத்து சென்னையின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் - கான்வே இணை சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில், ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிய டிவோன் கான்வேவும் 47 ரன்களில் ஆட்டமிழக்க குஜரத்தின் கை ஓங்கியது.  இதன் பிறகு களமிறங்கிய ஷிவம்  துபேவும், ரஹானேவும், அணியின் ரன்னை மெல்ல மெல்ல உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து தனது கடைசி ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய அம்பத்தி ராயுடு 19 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதற்கு அடுத்த பந்திலேயே கேப்டன் தோனியும் ஆட்டமிழக்க சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

உச்சகட்ட பரபரப்பில் கடைசி ஓவர்

இதன்பிறகு கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என இருந்தபோது, கடைசி ஓவரை மோஹித் ஷர்மா வீசினார். முதன் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் போட்டியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்த போட்டியில் 5 வது பந்தை ஜடேஜா அற்புதாக சிக்ஸ் அடித்தார். இதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது ஜடேஜா அதையும் பவுண்டரியாக மாற்றி பரபரப்பு முற்றுப் புள்ளி வைத்தார்.  இதனால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கோப்பையை வென்ற சிஎஸ்கே

10 வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை அணி 5 வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஏற்கனே 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைபற்றியிருந்தது குறிப்பிடத்தது. சிஎஸ்கேவின் இந்த வெற்றியை பலரும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.