ஐபிஎல் 2023: சிக்ஸர் மழை பொழிந்த சென்னை - பெங்களூரு அணிகள்..!

Chennai

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த சென்னை - பெங்களூரு இடையேயான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

சென்னை - பெங்களூரு 

ஐபிஎல் 2023  தொடங்கிய நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்துவருகிறது. குறிப்பாக சென்னை அணி விளையாடும் ஆட்டம் என்றால் அங்கு கடைசி பந்து வரை பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்ளும். சுலபமாக ஜெயித்து விடுவார்கள் என்று எண்ணும் போது, ஆட்டத்தை மாற்றும் அளவுக்கான வீரர்கள் இந்த சீசனில் களமிறங்கி இருப்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் நேற்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான லீக் போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

சிக்ஸர் மழை

சின்னசாமி ஸ்டேடியம் சின்ன ஸ்டேடியம் என்பதால் அந்த மைதானத்தில் சிக்ஸர் மழையை இருதரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்தனர். முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்வாடுக்கு பந்து பேட்டில் படாமலேயே இருந்ததால் என்னவோ, அவர் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டார். அதன் பிறகு களமிறங்கிய ரஹானேவுடன் வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய கான்வே, 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய சிவன் துபே ஆட்டத்தின் போக்கை வேகமெடுக்க செய்தார் என்றே சொல்லலாம். 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் சிவம் துபே. கிட்டத்தட்ட 17 கிக்ஸர்களை சென்னை அணி அடித்தது. சென்னை - பெங்களூரு அணி சேர்த்து மொத்தம் 33 சிக்ஸர்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. 

சென்னை வெற்றி 

20 ஓவர்களில் 227 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் தொடக்கம் பிரமாதமாக இருந்தது. ஃபாஃப் டூ பிளசிஸ் 33 பந்துகளில் 62 ரன்களும், 36 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல்லும், 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக்கும் கடைசி வரை பெங்களூரு ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஆனால், ஆரம்பம் சரியாக இருந்து என்ன பலன், ஃபினிஷிங் சரியாக இருக்க வேண்டுமே என்பது போல, கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது. கடைசியாக சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது. 

3வது இடத்திற்கு முன்னேறிய சென்னை

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு சென்னை அணி தனது 3 வது வெற்றியை பதிவு செய்ததோடு, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.