பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

mkstalin vs annamalai

அண்ணாமலை வெளியிட்ட 'DMK FILES'

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது 'DMK FILES' என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.  மேலும், திமுக கட்சியின் சொத்து மதிப்பையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும்,  எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலை மீது வழக்கு தொடுக்க போவதாக தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல அமைச்சர்கள் அண்ணாமலை மீது, குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், வழக்கு தொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டனர். 

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் தரப்பிலிருந்து அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், அடிப்படை ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை கருத்துக்களை கூறிவருவதாகவும், முதலமைச்சரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வகையில், அவரது நடவடிக்கைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.