கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி! 

Chief Minister M.K.Stalin pays homage to football player Priya

மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இராணி மேரி கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்த மாணவி பிரியா கால்பந்தாட்ட போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பலப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப்பெற்றுள்ளார். இந்நிலையில் மூட்டு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மாணவி பிரியா, மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையும், நிர்வாகத் திறமையின்மையுமே மாணவியின் மரணத்திற்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தனர். 

மாணவி சிகிச்சையில் இருக்கும்போதே, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு பிறகு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று, பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தவறிழைத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாணவியின் பெற்றோரிடம் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவராண உதவித் தொகை மற்றும் வீடு ஒன்றை வழங்குவதற்கான ஆவணங்களையும் வழங்கினார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முதலமமைச்சர் மு.க.ஸ்டாலின், “கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது.” என தெரிவித்துள்ளார்.