கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் தேவை.. சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர்.!

xvxc

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் கிடைக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நெடுங்கால கோரிக்கை

மத்திய மாநில அரசுகள் சமூக ரீதியில் பின்தங்கிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு இடஒதுக்கீடு என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் எதுவும் கிடையாது. இந்தநிலையில், முஸ்லீம் மதத்திற்கோ அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கு சலுகைகளை அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பாஜக எதிர்ப்பு

சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தநிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதம் மாறிய தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரிய  சலுகை அளிக்கக்கூடாது என வலியுறுத்தி வந்தனர். இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகை அளிக்கப்பட்டால் மேலும் மதமாற்றம் நடப்பது அதிகரிக்கும் என்ற காரணங்களைச் சொல்கிறார்கள். கிறிஸ்தவம், இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பட்டிலினத்தவர்களை, பட்டியல் பிரிவிலேயே வைப்பது குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசும் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் குழு ஒன்றை அமைத்துள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக்குழுவுக்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் தீர்மானம்

இந்தநிலையில், கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பயன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்ட திருத்தம் தேவை என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகைகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் பிரிவினருக்கும் வழங்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரசமைப்பு சட்டத்தில் அதற்காக திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வர உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.