புதுவையில் ஆளுநர் ஆட்டிப்படைக்கும் ஆட்சி நடைபெறுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்

MK Stalin

புதுச்சேரில் ஆளுநர் ஆட்டிப்படைக்கும் ஆட்சி நடைபெறுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இல்லத் திருமண விழாவில் முதல்வர் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி மாநில திமுக அவைத் தலைவருமான எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமண நிகழ்வில் இன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று தலைமையேற்று நடத்தி வைத்தனர். 

இந்நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழகத்தையும் புதுவையையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது, அதனால் தான் தமிழ்நாட்டில் பேசும்பொழுதெல்லாம் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகள் என அடிக்கடி சொல்வதுண்டு. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்பதால், திராவிட இயக்கத்தின் இலக்கியத் தலைநகர் என சொல்லத்தக்க பெருமையுடையதுதான் இந்த புதுச்சேரி. மறைந்த தலைவர் பிறந்த ஊர் திருவாரூர் என்றாலும், அவர் கொள்கை உரம்பெற்றது புதுச்சேரிதான்”. 

கலைஞரின் நாடகம் அரங்கேற்றம்

“திராவிடர் கழகத்தின் பரப்புரை நாடகமான சாந்தா அல்லது பழனியப்பன் என்ற நாடகத்தை கலைஞர் எழுதி, அதில் சிவகுரு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நாடகத்தை புதுவையில் அரங்கேற்றியபோது, ஒரு கலக கும்பல் உள்ளே புகுந்து கலைஞரை தாக்கி அடித்து, சாக்கடையில் தூக்கிவீசி சென்றனர். அவரை பார்த்த மற்றவர், அவர் இறந்துவிட்டதாகவே நினைத்துள்ளனர். மறுநாள் காலையில் இதை கேள்விப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், ஓடோடி வந்து, கலைஞரை தூக்கி மடியில் வைத்து, காயத்திற்கு கட்டுப்போட்டுள்ளார். பின்னர் நீ இங்கே இருக்க வேண்டாம், என்னோடு ஈரோட்டுக்கு வா என அழைத்து சென்றார். அங்கு குடியரசு வார இதழில் துணை ஆசிரியராக பணியாற்று என்று உத்தரவிடுகிறார். குடியரசு இதழில் பணியாற்றவும், தந்தை பெரியாரோடு பழகவும் புதுப்பாதை அமைத்துக்கொடுத்ததுதான் இந்த புதுவை. அதனால் தான் கலைஞருக்கு புதுவை என்றால் ஒரு பாசம் வந்துவிடும், அவருக்கு மட்டும் அல்ல அவரது மகனான எனக்கும் புதுவை என்றால் ஒரு பாசம் வந்துவிடும். அந்த கொள்கை உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன்.” எனக் கூறினார்

புதுவையில் திராவிடமாடல் ஆட்சி

“தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் உதய சூரியன் ஆட்சி மலர்ந்திருக்கிறது. மலர்ந்திருக்கிற இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையோடு சொல்கிறோம். அப்படி ஒரு திராவிடமாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான். உங்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும் அந்த ஆசை உள்ளது. கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது கூட அந்த வாய்பு கிட்டிருக்கும் ஆனால் போய்விட்டது, அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.” என கூறினார் ஸ்டாலின். 

புதுவை முதல்வர் நல்லவர் ஆனால் வல்லவரா?

தொடர்ந்து பேசிய அவர், “இப்போது இதே புதுவை மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் ஆனால் மக்களுக்காக நடைபெறுகிறதா? முதலமைச்சருனு ஒருத்தர் இருக்காரு, உயர்ந்த மனிதர் தான், உயரத்தில், ஆனால் அடிபணிந்து கிடக்கிறார். பொம்மை முதலமைச்சராக அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரை குறை செல்ல விரும்பவில்லை. அவர் நல்லவர்தான், ஆனால் நல்லவர் வல்லவராக இருக்கனுமா வேண்டாமா? இல்லையே..?? என கடுமையாக விமர்சனம் செய்தார். 

தமிழிசையை வறுத்தெடுத்த ஸ்டாலின்

மேலும் “ஒரு கவர்னர் ஆட்டிப்படைக்கக்கூடிய வகையிலே புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் வெட்கப்பட வேண்டாமா? அதைக் கண்டு வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா? ஆனால் அடங்கி ஒடுங்கிப் போயிருக்ககூடிய நிலையிலே இன்றைக்கு ஒரு ஆட்சி நடைபெறுகிறது என்பது இந்த புதுவை மாநிலத்திற்கு மிகப்பெரிய இழுக்காக அமைந்துள்ளது. ஏதாவது ஒரு நன்மை நடந்திருக்கிறதா? இல்லை. என ஆளுநர் தமிழிசையை மறைமுகமாக சாடினார் முதலமைச்சர் ஸ்டாலின். 

புதுவையில் திமுக ஆட்சி

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “இப்படிப்பட்ட ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிற வேளையில் தான் நம்முடைய தோழர்கள், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாரும் இங்கு ஆட்சி வர வேண்டும், அது நம்முடைய ஆட்சியாக மலர வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகின்றனர். இதில் தவறு இல்லை, ஏற்கெனவே நாம் இங்கு ஆட்சியில் இருந்தவர்கள் தான். ஃபரூக் மரக்கையார் தலைமையில், ராமசந்திரன் அவர்கள் தலைமையில், ஜானகி ராமன் தலைமையில் என இதே புதுவையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்றிருக்கிறது. நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மீண்டும் புதுவை மாநிலத்தில் உதயமாகும், அதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்” என வெளிப்படையாக கூறினார். 

 

கூட்டணி ஆட்சி

“காங்கிரசை சேர்ந்த வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, புதுவை மதவாத ஆட்சி மட்டும் உருவாகிவிடக்கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருந்தாக வேண்டும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

அடுத்த தேர்தலுக்கு இலக்கு 

“விரைவில் நாம் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம், எனவே நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல, அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் நமது ஆட்சியை அமைக்க வேண்டும் என இலக்கோடு இப்பொழுதே நீங்கள் பணியாற்ற வேண்டும், அதற்கான பணியை தொடங்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் யார் கூட்டணி, எப்படி கூட்டணி என்பதை அப்பொழுது முடிவெடுத்துக்கொள்ளலாம் ஆனால் கட்சிக்கு அச்சாரமாக நாம் இப்பொழுதே நமது கடமையை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும்” என தொண்டர்களுக்கு அறிவுரை கூறினார் முதலமைச்சர் ஸ்டாலின்.