கோவையில் மீண்டும் போட்டி.. யாருடன் கூட்டணி.? கமல்ஹாசன் தடாலடி அறிவிப்பு.!

mnm

மீண்டும் கோவையில் போட்டியிட தயாராக இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.  

மநீம ஆலோசனைக் கூட்டம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாநில மற்றும் தேசிய கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றன. அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்போதே அறிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்-22) கோவையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை நிர்வாகிகள் தமிழகம் முழுவதிலிமிருந்து வந்திருந்தனர். 

மீண்டும் கோவையில் போட்டி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்; மீண்டும் கோவையில் போட்டியிட தயாராக உள்ளதாக நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்தார். கோவையில் மக்கள் நீதி மய்யத்திற்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும், கூட்டணி வைப்பது தொடர்பாக பல்வேறு இடங்களிலிருந்து அழைப்பு வருவதாகவும் தெரிவித்தார். 

வெற்றியை நழுவவிட்ட கமல்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் வெற்றியை பறிகொடுத்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் கமல்ஹாசன் வெற்றி பெற்றுவிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார் கமல்ஹாசன். 

காங்கிரஸுடன் கூட்டணியா?

இந்தநிலையில், மக்களைவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கு முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். அதையடுத்து, ராகுல் காந்தியை நேரில் சென்று சந்தித்து பேசினார். இதன் அடிப்படையில், வரும் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப்போகிறாரா என்று யூகத்தின் அடிப்படையில் பேசப்பட்டது. 

திமுகவுடன் கூட்டணியா?

அண்மையில், விகடன் பத்திரிக்கை நடத்திய கலைஞரும் விகடனும் என்ற நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் புகழ்ந்து பேசினார். அதை வைத்து திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறாரா கமல்ஹாசன் என்ற ஒரு யூகமும் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதியை அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாகத்தான் பார்க்கப்படுகிறது.