நடந்து முடிந்த IT Raid.. ஆரம்பித்த ED.. கலக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி.! 

website post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், இன்று ஜூன் 13 காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடந்து முடிந்த IT Raid

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டு நாட்கள் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனையானது கரூர் சென்னை மற்றும் மற்ற மாநிலங்களிலும் நடைபெற்றது. வருமான வரித்துறை சோதனை முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

ஆரம்பித்த ED

இதையடுத்து, வருமான வரித்துறை சோதனையின் தொடர்ச்சியாக, இன்று ஜூன் 13-ம் தேதி காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அமலாக்கத்துறை சோதனையானது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னையில் உள்ள வீட்டிலும், பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆதரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு மேல் சோதனை நடத்திய நிலையில், இன்று அவரது இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

குறிவைக்கப்பட்ட செந்தில் பாலாஜி 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 11-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்திருந்தார். அப்போது அவர் வரும் வேளையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து, அந்த சம்பவம் மிகவும் பேசுபொருளானது. மேலும், மேடையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2G,3G,4G என குறிப்பிட்டு பேசியிருந்தார். அதில் ஒரு G செந்தில் பாலாஜி தான் என்று டெல்லியில் உள்ள அரசியல் நோக்கர்கள் தனியார் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு தெரிவித்திருந்தனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் சோதனை மேற்கொண்டு வருவது அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்துவிட்டார்கள் என்றே பார்க்க முடிகிறது.