அடுத்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவது உறுதி -  டொனால்ட் ட்ரம்ப் 

trump

தனக்கு எதிராக பெரிய சதி

தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் எதிரிகள் தன் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி தலைவருமான டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை எனவும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுக்க பெரிய அளவில் சூழ்ச்சிகள் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிபர் பதவிக்கு போட்டியிடுவது உறுதி

வடக்கு கரோலினா மற்றும் ஜோர்ஜியாவில் குடியரசுக் கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப்
தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே இந்த விசாரணை நடத்தப்பட்டது என்றும் எத்தனை விதமான தொல்லைகள், தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் அடுத்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவது உறுதி என்றும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். 

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை

தொடர்ந்து பேசிய அவர், நான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவன் என்பதால் துன்புறுத்தப்படுவதாகவும், எனக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விசாரணை, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளானாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப் மீதான வழக்கு

ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகியதும் அரசு அதிகாரப்பூர்வ ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்ற வழக்கில் ட்ரம்ப் மீது தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.