செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்.. நீதிபதி உத்தரவு.!

custody

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அகில இந்திய தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வழியால் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

இதையடுத்து, ஓமந்தூரார், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையால், அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி மனைவி மனு தாக்கல்

இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒரு பக்கம் நடக்க உள்ள நிலையில் இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வந்தது. அதன்படி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி சற்று நேரத்திற்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவரின் அறையிலேயே இந்த வழக்கு விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள், செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இதையடுத்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு சென்று வாதம் எதிர்வாதம் வைத்தனர். சிகிச்சை அறையிலேயே நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. 

அமலாக்கத்துறை தரப்பு வாதம்

மேலும், அமலாக்கத்துறை தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டதாகவும், மைது மெமோவை பெற செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

கைது செய்யப்படுவோம் என தெரிந்தே மெமோவை செந்தில் பாலாஜி பெற மறுத்து விட்டார். ரிமாண்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமீன் தான் கோர வேண்டும் ; விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்கவில்லை. கைது தொடர்பான தகவலை தெரிவிக்க முயன்றபோது செந்தில் பாலாஜியின் சகோதரரும், மனைவியும் அதனை கேட்கவில்லை. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக இருவருக்கும் தகவல் தெரிவித்தும் பதில் கிடைக்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

கைதில் விதிமுறை பின்பற்றப்படவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு முன்வைத்தது. கைதுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை எனவும் செந்தில் பாலாஜி வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

நீதிமன்ற காவல்
 
மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, இறுதியாக செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். மருத்துவமனைக்கே நேரில் சென்று விசாரணை நடத்தியநிலையில், வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.