அடுத்த அச்சுறுத்தலை தொடுக்கும் கொரோனா வைரஸ் - பிரதமர் ஆலோசனை

Covid-19 BF-7

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பிஎஃப்-7 வகையின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் பாதிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பிஎஃப்-7 வகை சீனா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. குறிப்பாக சீனாவில் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கட்டுகுள் இருந்த கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கூட இல்லாமல் நிரம்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிவருகிறது. ஆனால் சீன அரசாங்கம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. 

இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 3,402 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட்19 பாதிப்பு தொடங்கியதில் இருந்து இன்றுவரை மொத்தம் 4.46 கோடி (4,46,76,515) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,30,681 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒமிக்ரான் பிஎஃப்-7 

மேலும் ஒமிக்ரான் பிஎஃப்-7 வகை வைரசினால் இந்தியாவில் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் இருவருக்கும் ஒடிசாவில் இருவருக்கும் தற்போது இந்த வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என கூறியுள்ளார். தற்சமயம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், முகககவசம் மற்றும் சமூக இடைவெளியை மக்கள் தாங்களாக பின்பற்ற வேண்டும் என மன்சுக் மாண்டேவியா குறிப்பிட்டுள்ளார்.