IPL 2023 - முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி போராடி தோல்வி.!

csk

தொடங்கியது ஐபிஎல்

ஐபிஎல் 16-வது சீசனின் முதல் லீக் போட்டி நேற்று (மார்ச் 31) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்குத் துவங்கி  நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சிஎஸ்கே பேட்டிங்

முதலில் களமிறங்கிய சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர்  டெவோன்  கான்வே 6 பந்துகள் எதிர்கொண்டு 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கேவின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் தனது  அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், மற்ற சிஎஸ்கே வீரர்களான மொயின் அலி 23 (17), பென் ஸ்டோக்ஸ் 7 (6), அம்பத்தி ராயுடு 12 (12) என சொற்ப ரன்களுக்கு  அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். 

சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் சதமடிப்பார் என்று அனைவரும்  எதிர்பார்த்த  நிலையில் 50 பந்துகளில் 92 ரன்களுக்கு  ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய  ஜடேஜா 1 (2) ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி மைதானத்தில் களமிறங்கினர். எல்லோரும் எதிர்பார்த்த படியே கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும்  பவுண்டரி  அடித்து ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டினார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 178/7 ரன்களை குவித்து அசத்தியது.

179 இலக்கு

179 என்ற இலக்கை கைப்பற்ற  களமிறங்கிய குஜராத் அணி தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 16 பந்துகளில்  25 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். இம்பாக்ட் பிளேயர்-ஆக களமிறங்கிய சாய் சுதர்ஷன் 17 பந்துகளில்  22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குஜராத் அணி கேப்டன்  ஹார்திக் பாண்டியா பெரிய ஸ்கோர் அடிக்காமல் 8 ரங்களில் ஆட்டமிழக்க தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி  36 பந்துகளில்  63 ரன்கள் சேர்த்து 14 வது ஓவரில் தனது  விக்கெட்டை துஷார் தேஷ்பாண்டேவிடம்  பறிகொடுத்தார். 

சிஎஸ்கே அணி போராடி தோல்வி

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் அணிக்கு தேவையான ரன்களை சேர்த்து 27 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ராகுல் தெவாடியா மற்றும் ரஷித் கான் கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருவரும் சிறப்பாக விளையாடி 179 என்ற இலக்கை முறியடித்தனர். குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182/5 ரன்களை சேர்த்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேவத்தியா 15 (14), ரஷதி கான் 10 (3) என  இருவரும் அட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே அணியில் 20 வயதான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை 2 விக்கெட் மற்றும் 3 பந்தில் 10 ரன்கள் சேர்த்த ரஷித் கான் பெற்றார்.