IPL 2023: சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதல்

CSK vs SRH

நடந்து வரும் 16வது ஐ.பி.எல். தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதவுள்ளன. 

ஐ.பி.எல்.16 வது சீசன்

கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் ரசிகர்களுக்கு தடை, பல்வேறு கட்டுப்பாடுகளால் சென்னையில் போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னையிலும் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதல் போட்டியில் சென்னை தோல்வியை தழுவினாலும், பின்னர் லக்னோ அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டி, மும்பைக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும், பெங்களூருக்கு எதிரான ஐந்தாவது போட்டியிலும் சென்னை அணி வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 4வது போட்டியில் சென்னை தோல்வியை தழுவியது. மொத்தம் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. 

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரிதுராஜ் கெய்க்வாட், ரஹானே, தேவான் கான்வே ஆகியோர் ஃபார்மில் இருப்பதால் சென்னை அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது. அதைப்போல பந்து வீச்சில் சென்னை அணி, சில நேரங்களில் சொதப்பி வந்தாலும், ஹைதராபாத் அணியை விட நல்ல நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் பின் தங்கியுள்ளனர். இதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஹைதராபாத் அனி களமிறங்கும். இந்த அணியில் தமிழக வீரரான நடராஜன் உள்ளதால், சென்னை ரசிகர்கள் நடராஜனுக்கு ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றி வாய்ப்பு யாருக்கு? 

சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர் 18 போட்டிகளில் விளையாடிவுள்ளன. இதில் 13 போட்டிகளில் சென்னையும் 5 போட்டிகளின் சன்ரைசர்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் நடந்த கடைசி 23 போட்டிகளில் சென்னை அணி 19 போட்டிகளில் வென்றுள்ளது, 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இன்றைய போட்டி சென்னை மைதானத்தில் நடைபெற இருப்பதால் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள். கடந்த போட்டியில் பெங்களூரு அணியை அவரகளது சொந்த மைதானத்திலேயே சென்னை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சென்னை மைதானத்தில் நடந்த முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை போராடி தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் சென்னை ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்ற முனைப்புடன் சென்னை வீரர்கள் விளையாடுவார்கள். மேலும் இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம் அடையவோ அல்லது பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதில் செல்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.