ஐபிஎல் திருவிழா : சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல். வெற்றி வாய்ப்பு யாருக்கு ?

csk vs mi

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோத உள்ளன. தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்ற சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் சென்னை பவுலர்களின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கேப்டன் டோனி அவர்களை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனால் பந்து வீச்சில் சென்னை அணி அதிக கவனம் செலுத்தும் என கணிக்கப்படுகிறது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் சிசாண்டா மகாலா இணைந்திருப்பது சென்னையின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்க்கும்.


வெற்றிக் கணக்கை தொடங்குமா மும்பை?

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்று இருந்தது. அந்த ஆட்டத்தின் மும்பை அணி பேட்டிங்கில் அசத்தினாலும், மோசமான பந்துவீச்சால் தோல்வி அடைய நேரிட்டது. இந்த நெருக்கடியுடன் வெற்றி பெறும் உத்வேகத்துடன் களம் இறங்க உள்ள முபை அணிக்கு உள்ளூர் போட்டி என்பது கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சூர்யக்குமார் மீது நம்பிக்கை இருக்கிறது

மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் நேற்று அளித்த பேட்டியில், 'பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தொடக்கம் கண்டாலும் அதன் பிறகு சமாளித்து ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டினோம். இப்போது வான்கடேவுக்கு திரும்பி இருப்பதால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். அணியில் ஓரிருவர் மட்டுமல்ல, அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆக்ரோஷமாக மட்டையை சுழற்ற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவரது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அதை களத்தில் நிரூபித்து காட்டுவார்' என்றார்.

மும்பைக்கு எதிராக அதிக தோல்விகள்

இரு அணிகளும் நஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை மோதல் என்பது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் போல ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிப்பதுடன் ஆட்டத்தில் அனல் பறக்கும். அதற்கு இந்த ஆட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. இவ்விரு அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 14-ல் சென்னையும் வெற்றி கண்டன. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னைஅணி மும்பைக்கு எதிராகத் தான் அதிகமாக தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.