சென்னையின் வெற்றிப் பயணம் தொடருமா..? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

csk vs rr

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி ‘ஹாட்ரிக்’வெற்றி பெறும் உத்வேகத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸை இன்று சந்திக்கிறது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, அதன் பிறகு லக்னோவை 12 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானேவின் மின்னல்வேக அரைசதமும், ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சும் வெற்றிக்கு உதவின.

கேப்டனாக 200 வது போட்டியில் ஆடும் டோனி

உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்திய சென்னை அணி இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பெருவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். அதேசமயம் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஜடேஜா, ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, கேப்டன் டோனி உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனிக்கு இது 200-வது ஆட்டமாகும். இதனால் டோனிக்கு வெற்றியை பரிசளிக்க அணி வீரர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.  

ராஜஸ்தான்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி  ஐதராபாத் மற்றும் டெல்லிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து. இந்நிலையில், அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் அந்த அணியின்  முதுகெலும்பாக உள்ளனர். இருவரும் தலா இரு அரைசதம் அடித்துள்ளனர். கேப்டன் சாம்சன், ரியான் பராக் மற்றும் பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அஸ்வின் வலு சேர்க்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் வியூகங்களை தீட்டியுள்ளது. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15-ல் சென்னையும், 11-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

ஆடுகளம் எப்படி இருக்கும்?

ஆடுகளத்தை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். போக போக மெதுவான தன்மையுடன் மாறும் இந்த ஆடுகளத்தில் 170 ரன்களுக்கு மேல் எடுத்தாலே அது சவாலான ஸ்கோராக இருக்கும். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நேரலையாக உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல்:-

சென்னை:

கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு அல்லது ரஹானே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), மொயீன் அலி, மிட்செல் சான்ட்னெர், சிசாண்டா மகாலா அல்லது பிரிட்டோரியஸ், துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத்சிங்.

ராஜஸ்தான்:

ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர், துருவ் ஜோரெல், ஜாசன் ஹோல்டர், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், முருகன் அஸ்வின்.