பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு.!

eng

தமிழகத்தில் அரசு , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

கலந்தாய்வு அட்டவணை வெளியீடு 

சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்விற்க்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்.மேலும், கலந்தாய்வு அட்டவணையையும் அவர் வெளியிட்டார். 

பொறியியல் படிப்பிற்கு எத்தனை மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்களோ அந்த மாணவர்களுக்கான அந்த ரேண்டம் எண் ஜூன் மாதம் ஏழாம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும், தரவரிசை பட்டியல் ஜூலை 12-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்றும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட துணை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் ஜூன் 04-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்குகிறது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் கிட்டத்தட்ட 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.