WPL 5-வது ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணி

website post (15)

நவி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த TATA இன்  WPL 5-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி UP வாரியர்ஸை வீழ்த்தியது. மார்ச் 4-ம் தேதி துவங்கிய மகளிர் கிரிக்கெட் தொடர் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், நேற்று ஐந்தாவது  போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் உ.பி வாரியர்ஸ் அணிகள் மோதின. 

உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 211 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 6.3 ஓவரில் அணி 67 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஷபாலி வர்மா 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மேரிஸன் கேப் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைச்சதம் எடுத்த கேப்டன் மெக் லேனிங் 42 பந்தில் 3 சிக்சர் 10 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி நேரத்தில் ஜெமிமா ரோட்ரிகஸ் – ஜோனசன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 211 ரன்கள் குவித்தது. ரோட்ரிகஸ் 34 ரன்களும், ஜோனசன் 42 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். இதையடுத்து உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 212 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 

பின்னர் பேட்டிங் செய்த உ.பி வாரியர்ஸ் அணி ஆரம்பத்திலேயெ விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. 8-வது ஓவரில் 33-க்கு 3 என்ற நிலையில் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தது. மெக்ராத் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். உ.பி. வாரியர்ஸ் அணி 42 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் வீழ்ந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.