சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் அமளி..!

RN Ravi

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளும், அதிமுகவின் கூட்டணிக் கட்சியுமான பாமகவும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டபேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தொடரின்போது ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டக்கூடாது என ஈ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை வைத்து, அது நிறைவேற்றப்படாததால் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். 

புத்தாண்டு கூட்டத்தொடர்

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள ஆளுநருக்கு நேரில் சென்று அழைப்புக்கொடுத்தார். இதன்படி இன்று (09-01-2023) காலை பத்து மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. 

திமுக கூட்டணிக் கட்சிகள் அமளி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும் என்றும், தமிநாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடம் என்னும் பிற்போக்கு கொள்கை வேரூன்றி உள்ளது எனவும் பேசினார். இதற்கு பாஜகவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்பட்டு வருகின்றார் என்றும், இந்துவக் கொள்கைகளை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிக்கிறார் விமர்சித்தனர். 

இந்நிலையில் இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை கண்டித்து, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். மேலும் எங்கள் நாடு தமிழ்நாடு, ஆளுநரை நீக்குக போன்ற கோசங்களையும் திமுகவின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பினர். 

ஆளுநருக்கு எதிராக பாமக

அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து பதாகைகளை ஏந்தி ஆர்.என்.ரவிக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.  

காங்கிரஸ் குற்றச்சாட்டு 

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் அரசியல் பேசி, பாஜக தலைவரைப் போல செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ், தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த இன்றைய ஆளுநர் உரையில் தமிழ்நாடு, திராவிடமாடல் போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு ஆர்.என்.ரவி உரையாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

வழக்கமாக எதிர்க்கட்சியினரே சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கூச்சல் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபடுவர். ஆனால் ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சியினரே கூச்சல் எழுப்பி ஆளுநருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.