ரூபாய் 500 கோடி கேட்டு திமுக சட்ட அறிக்கை.. பதிலுக்கு 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கேட்ட அண்ணாமலை.!

aa

திமுக சொத்துப்பட்டியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொத்து பட்டியலை வெளியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே பொதுவெளியில் கூறிவந்தார். இதனால் திமுகவினர் மத்தியில் என்னமோ, ஏதோ என்று கதிகலங்கி போயிருந்தனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை முதல் பாகமாக வெளியிட்டார். அந்த சொத்துப்பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர். மேலும் அந்த சொத்துப்பட்டியலில் திமுக வழங்கிய ஒப்பந்தம், தொழில் வர்த்தகம் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றிருந்தன. 

ஆர்.எஸ்.பாரதி சட்ட அறிக்கை

இந்தநிலையில், அண்ணாமலை திமுகவினர் சொத்துப்பட்டியலை வெளியிட்டதையடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு சட்ட அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். மேலும், அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும், அண்ணாமலை ஆருத்ரா நிறுவனத்தில் 84 கோடி மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 

சட்ட அறிக்கைக்கு அண்ணாமலை பதில்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனுப்பியிருந்த சட்ட அறிக்கைக்கு தற்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்திருக்கிறார். அண்ணாமலை வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மற்றும் திமுக முறைகேடாக வழங்கிய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக ஏற்கனவே ரூ.100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையை தொடர்ந்த நிலையில், மீண்டும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள், 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார்.

கோடிகளில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் திமுகவினர் இருக்கும்போது, என்னிடம் மேலும், 500 கோடி ரூபாய் கேட்கிறார் திமுகவின் அமைப்புச் செயலாளர். உங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பொறுமையாக இருக்க வேண்டும்" என்று பதில் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்ட அண்ணாமலை

மேலும், "நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தியுள்ளார். என் மீதும், பாஜக மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூபாய் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

"அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் , பாஜக மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ். பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும்" என அண்ணாமலை பதில் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.