முதலமைச்சர் சென்ற புல்லட் ரயிலின் டிக்கெட் விலையை ஏன் வெளியிடவில்லை தெரியுமா.. அண்ணாமலை சொன்ன பதில்.!

mkvsanna

முதலமைச்சர் பயணம்

சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ளார். சிங்கப்பூரில் 25-ம் தேதி வரை இருந்த முதல்வர், அதன்பின் ஜப்பான் சென்றுள்ளார். ஒசாகா நகரில் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அங்குள்ள தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதையடுத்து, ஒசாகாவில் இருந்து, ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை புல்லட் ரயிலில் சென்றார். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

முதலமைச்சர் ட்வீட்

இப்பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். சுமார்500 கி.மீ. தூரத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் அடைந்து விடுவோம். உருவ அமைப்பில் மட்டுமின்றி, வேகம், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து. அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பதில்

இதையடுத்து, ஜப்பானில் முதலமைச்சர் பயணம் செய்ததற்கான டிக்கெட் விலையை வெளியிடவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அண்ணாமலை இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில், மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். அப்போது இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டுவரப்பட உள்ளது என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கம்போல் திமுகவை வம்புக்கு இழுப்பதுபோல் பிரச்னையை தோளில் வாங்கிப்போட்டுக்கொண்டிருக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் புல்லட் ரயிலில் சென்றுள்ளார். அதன் டிக்கெட் விலை அதிகம். அதனால், அவர் டிக்கெட் விலையை வெளியிடவில்லை என்று தெரிவித்தார். வந்தே பாரத் ரயிலில் சாமானியரும் பயணம் செய்யலாம், ஆனால் புல்லட் ரயிலில் சாமானியர்கள் பயணிக்க முடியாது என்று தெரிவித்தார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அண்ணாமலை ரபேல் வாட்ச் பேசுபொருளாகியிருந்தநிலையில், தற்போது, அண்ணாமலை முதலமைச்சரின் டிக்கெட் விலை பற்றி பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.