அதிமுகவின் பொதுச் செயலாளராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?

AIADMK OPS

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வருகிற 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி தலைமையில் பொதுக்குழு கூட்டம் 

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் வைத்து கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். ஆனால் அந்த கூட்டத்தில் பொதுக்குழு தீர்மானங்கள், அதாவது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தொடர்வார்கள் என்ற தீர்மானங்கள் உட்பட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தடாலடியாக அறிவித்தார். அதன்பின்னரே ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். 

ஓ.பி.எஸ். வழக்கு 

ஆனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டடது செல்லாது எனவும், ஜூன் 23ம் தேதிக்கு முன்னதாக இருந்தபடியே அதிமுக இரட்டை தலைமையில் தொடர வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனிநபர் நீதிபதி ஜூன் 23ம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என ஆகஸ்ட் 17ம் தேதி தீர்ப்பளித்தார்.  

பழனிசாமியின் மேல்முறையீடு

ஆனால் இந்த தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர். 

ஓ.பி.எஸ். மேல்முறையீடு

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்யவும், தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதி செய்யவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீஎசெல்வம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாட்டில் கூடிய விரைவில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறலாம் என்பதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, அதிமுக பெயரை குறிப்பிட்டோ, அல்லது இரட்டை இலை சின்னத்தை கேட்டோ எந்தவித இடையூறுகளும் செய்யக்கூடாது என மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் இணைத்துள்ளது உச்சநீதிமன்றம். இந்நிலையில் வழக்கு விசாரணை இன்னும் காலதாமதம் ஆகலாம் என்றும் தீர்ப்பு வர பல மாதங்களோ அல்லது ஆண்டுகளோ ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கிற்கான அடுத்த விசாரணை வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி நடைபெறவுள்ளது. 

பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ். முடிவு

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தற்போது பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் வரும் 21ம் தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் நியமித்த புதிய கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் வருகிற 21ம் தேதி (புதன்) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளராகிறாரா ஓ.பி.எஸ்.? 

ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில், அவரை இடைக்கால பொதுச்செயலாளராக அவரது ஆதரவாளர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் ஓ.பி.எஸ். கூட்டப்போகும் பொதுக்குழு கூட்டத்தில் அவரை அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை அதிமுகவிற்கு இரட்டை தலைமை வேண்டும் எனக் கூறிய ஓ.பி.எஸ். அவரது தலைமையில் ஒற்றைத் தலைமைக்கு தயாராகிவிட்டாரா என்ற கேள்வியும் அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

1972ம் ஆண்டு திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். அதிமுகவை தோற்றுவித்து 50 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இந்த 50வது ஆண்டில் அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லாமல் திண்டாடிவருகிறது. அதிமுகவில் அசுர பலம் கொண்டவராக இருந்த ஜெயலலிதா “எனக்கு பின்னால் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த கட்சி அப்படியே இருக்கும்” என ஜெயலலிதா கூறினார். ஆனால் அவர் மறைந்து 5 ஆண்டுகள் கூட தாக்குபிடிக்கமுடியாமல் தள்ளாடி வருகிறது அதிமுக.