’என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்’ – சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை..!

sachin tendulkar

தன் மகனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

பால் பாய் டூ கிரிக்கெட் கடவுள்

கிரிக்கெட் என்பது ஒரு மதமாக இருந்தால் அதன் கடவுளாக சச்சின் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி சச்சின் என்ற பெயர் கேட்டாலே சதம்.. சதம்..சதம்.. என்பதே நம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். இந்த பெயரை இவர் சாதாரணமாக பெற்றுவிடவில்லை, தன் விடாமுயற்சியினாலே ‘சச்சின் ஆடுனாலே சதம் தாம்ப்பா என்று சொல்லும் அளவிற்கு இந்திய கிரிக்கெட் மட்டுமல்ல சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவானாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக உலகக்கோப்பை போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் பந்துகளை அள்ளும் ‘பால் பாய் ஆக இருந்த சச்சின், முதன்முதலில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாதமிக்கு வந்த அவர் உயரம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் லில்லியால் நிராகப்பட்டு உள்ளார். அதற்கு பிறகு அவர் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்தது வேறு வரலாறு.

தன் 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக ஒரே ஒரு டி-20 போட்டியில் மட்டுமே பங்கேற்ற சச்சின், 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2013ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

தந்தை போல மகன்

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சிக் கோப்பையின் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அர்ஜூன் தெண்டுல்கர் அசத்தியுள்ளார்.

கடந்த 1988ஆம் ஆண்டு நடந்த ரஞ்சித் கோப்பையில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரும் முதல் போட்டியிலேயே சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

அழுத்தம் கொடுக்காதீர்

இந்நிலையில் தனது மகனான அர்ஜூன் டெண்டுல்கருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என் மகனுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள். என் பெற்றோர் எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நான்தான் நான் என்ன ஆகவேண்டும் என்ற ஊக்கத்தோடு விளையாடினேன். அதையேதான் நான் என் மகனுக்கும் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், “அர்ஜுனுக்கு ‘சாதாரண குழந்தைப் பருவம் இல்லை. வெற்றிகரமான கிரிக்கெட் வீரரின் மகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.