அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.!

eps

இபிஎஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க கோரி இபிஎஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிவில் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, உங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவிட முடியாது என்று நீதிபதி உத்தரவாதம் அளித்திருந்தனர். 

10 நாள் அவகாசம்

இதற்கு எதிர்வாதமாக, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக தேர்தல் நெருங்குவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதி ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், ஏப்ரல் 12-ம் தேதி விசாரணைக்கு வந்த இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க 10 நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். 

இபிஎஸ்-ஐ அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு அளித்த கெடு நாளையுடன் முடிவடையக்கூடிய நிலையில், இன்றே பதில் அளித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதுபற்றி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி அளித்த நான்கு கோரிக்கை மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் பதில் அளித்திருக்கிறது. அதில், ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கியும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

இந்த நடவடிக்கையானது, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தற்போது எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தநிலையில், ஓபிஎஸ்-ன் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..