இபிஎஸ் நாலாந்தர பேச்சாளர்..

யார் பிரதமராக இருக்ககூடாது என்பதே எங்களின் தற்போதைய கொள்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

website post (1) (47)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்-27-ம் தேதி நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று மார்ச்-02 காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்ட முதல் சுற்றிலிருந்தே முன்னிலை வகித்து வந்தார் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இந்தநிலையில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர்::

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு மிகப்பெரிய மகத்தான, வரலாற்றில் பதிவாகக்கூடிய மாபெரும் வெற்றியை தேடித்தந்திருக்கக்கூடிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப்போல் பேசிய பேச்சுக்கு, அந்த தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் நல்ல பாடத்தை புகட்டி இருக்கிறார்கள். 

குறிப்பாக, இந்த 20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறீர்கள். மக்கள் நல்ல எடை போட்டு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், விரைவில் நாம் சந்திக்க இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுடைய வெற்றிக்கு ஒரு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குறியது. ஆகவே, ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெற்றிக்கு அயராது பாடுபட்ட நாடாளுமன்ற முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் செயலாளர்கள், செயல் வீரர்கள் மற்றும் தோழமை கட்சியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தோழர்கள், தலைவர்கள் அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

நான் ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கக்கூடிய இடைத்தேர்தலை எடைத்தேர்தலாக பாருங்கள் என்று சொன்னேன். சொன்னதைப்போல் எடைத்தேர்தலாக பார்த்து நல்ல மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள். 

இறுதியாக, வர இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட மிகப்பெரிய வெற்றியை வழங்குவார்கள். நான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருக்கிறேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. யார் வெற்றி பெற்று பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, யார் பிரதமராக இருக்ககூடாது யார் ஆட்சியில் இருக்ககூடாது என்பதுதான் தற்போதைய கொள்கை என்று தெரிவித்தார்.