50 லட்சமில்ல, 50 கோடி வாங்கினாலும் நீட்டை ஒழிக்க முடியாது.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.!     

neet

நீளும் உயிரிழப்புகள்

தமிழகத்தில் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்து வருவது ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் நீட் என்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவ படிப்பிற்க்கான நுழைவுத்தேர்வு. இந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இங்குள்ள பெரும்பான்மை கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். நீட் தேர்வால் தங்களின் மருத்துவ கனவை எட்டமுடியவில்லை என்று அனிதா முதல் ஜெகதீஷன் வரை உயிரிழப்புக்களின் முடிவு முடிச்சுப்போடப்படாமலே நீண்டு கொண்டிருக்கிறது. 

நீட் ரகசியம்

இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்பதற்க்கான ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம், இரண்டரை ஆண்டுகள் கழித்தும் நீட் தேர்வை ஒழிக்கவில்லை என்று பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதையே, எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழகத்தில் இருக்கக்கூடிய இன்னும் சில கட்சிகள் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

நீட்டை ஒழிக்க முடியாது

இந்தநிலையில்தான், நீட் தேர்வை ஒழிப்பதற்கு "நீட் விலக்கு நம் இலக்கு" என்ற வாசகத்துடன் 50 இலட்சம் கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். நீட் தேர்வை ஒழிக்க எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது 50 லட்சம் கையெழுத்து வாங்குகிறார்கள், அவர்கள் 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை ஒழிக்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.        

 50 லட்சமில்ல, 50 கோடி வாங்கினாலும் வாய்ப்பில்ல.!                   

இன்றைய தினம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "ஒரு கையெழுத்து வாங்குனாங்க அது நிறைவேறவில்லை. இப்ப 50 இலட்சம் கையெழுத்து வாங்குறாங்க அதுவும் நிறைவேறப்போவதில்லை. 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை நிச்சயம் ஒழிக்க முடியாது. மாணவர்களை தயவு செய்து குழப்பாதீர்கள். நீட் தேர்வை ஒழிக்க முடியாதென்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. அதன்பிறகும், மாணவர்களை ஏன் குழப்பிக்கொண்டு இருக்கிறீர்கள். இது உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை குழப்பி திசை திருப்பும் செயல். நான் உண்மையாகவே சொல்கிறேன், இவர்கள் சொல்வதை மாணவர்கள் நம்பத் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.