மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது.. பட்ஜெட்டில் புரட்சிகர அறிவிப்பு.!

utim

தமிழக பட்ஜெட் 2023-2024

சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் 2023-24 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார்.

கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகாலமாக வெளியிடவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அதை மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது என்று திமுக அரசு கூறிவந்தது.

பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் ஈரோடு தேர்தல் பிரச்சார களத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25,800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். 

புரட்சிகர அறிவிப்பு

திமுக வாக்குறுதியில் கூறிய மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இதுவரை நிறைவேற்றாமல் வந்ததை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், புரட்சிகரமான இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். இந்த 1000 ரூபாய் இல்லத்தரசிகளின் குடும்ப சுமையை குறைக்கும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

யாருக்கு கிடைக்கும்

புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்களுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும்.  முதியோர் உதவித்தொகை பெற்றாலும், அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மேலும் PHH-AYY,PHH,NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. உரிமைத்தொகை பணம் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இதற்காக ரேஷன் அட்டைகளில் எந்த மாற்றம் செய்ய வேண்டியது இல்லை என்று கூறப்படுகிறது.

யாருக்கு கிடைக்காது

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது. NPHH -S, NPHH - NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.