மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன்.!

maithreyan

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மீண்டும் தன்னுடைய தாய்க்கழகமான பாஜகவில் இணைத்துக்கொண்டார். 

அதிமுகவில் இணைப்பு

ஆரம்ப காலத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அடுத்தடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும், தமிழக பாஜக தலைவராகவும் இருந்தார். இதையடுத்து, 2000-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து கொண்டார்.   

அங்கும் இங்கும் தாவல் 

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினராகவும், அதிமுக முக்கிய பொறுப்புகளையும் வகித்து வந்த மைத்ரேயன், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவில் குழப்பங்கள் நிலவிய நிலையில், சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அணியில் இணைந்தார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்த பிறகு மைத்ரேயனுக்கு அதிமுகவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பின்னர், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவில் அடுத்தடுத்து இபிஎஸ் பக்கமும் ஓபிஎஸ் பக்கமும் தாவினார். 

மீண்டும் தாய்க்கழகத்தில்

அதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற காரணத்தால் பாஜகவில் இணைய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்தநிலையில், 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் தன்னுடைய தாய் கழகமான பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,  

நாடு இன்று திருப்புமுனையிலே நின்று கொண்டிருக்கிறது

"23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளேன். 1991 மற்றும் 1999- களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளராக துணைத் தலைவராக பல்வேறு பொறுப்புகளில் வகித்துள்ளேன். 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நாடு இன்று திருப்புமுனையிலே நின்று கொண்டிருக்கிறது. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. 

பாஜக பட்டாளத்தில் இணைந்தது மகிழ்ச்சி

2047-ல் நாடு வல்லரசாக மாறும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாது உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினுடைய பட்டாளத்திலே இணைந்து, பிரதமர் மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதற்கு பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்திலே கடந்த இரண்டு வருடமாக மிகச்சிறப்பாக தன்னுடைய பணியை செய்து வருகிறார். அவரோடு இணைந்து தமிழகத்தில் கட்சிப் பணிகளை செய்வதில் பெருமகிழ்ச்சி" என்று பேசினார்.