பொதுக்குழு முதல் பொதுச்செயலாளர் தேர்தல் வரை.. 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.!

as

அதிருப்தி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிரச்னை தொடர்ந்து கொண்டு வருகிறது.  ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், இணை ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வமும் இருந்து வந்தனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவில் ஒற்றைத் தலைமை இல்லாததால் தான் அதிமுக தேர்தலில் தோல்வியடைந்தது என்று அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்து வந்தனர். 

ஒற்றைத் தலைமை 

இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமெடுக்கத் தொடங்கியது. ஒற்றைத் தலைமை கோஷத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் ஓங்கியிருந்தது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஷ்வரூபம் எடுத்தநிலையில், தலைமையை தேர்ந்தெடுப்பதற்கு பொதுக்குழுவை கூட்ட தொடங்கினர். இந்நிலையில், ஜூன் மாதம் 27-ம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அன்று நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டு, பொதுக்குழு சர்ச்சையில் முடிந்தது. சர்ச்சையில் முடிந்தநிலையில், அன்றைய பொதுக்குழு கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழு நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது.

ஜூலை பொதுக்குழு

அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெம்பான்மை மாவட்டச் செயலாளர்களின் ஆதரவோடு, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தபடியாக, அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது தரப்பினரை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்தநிலையில், இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பில் ஜூலை 11-ல் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. 

பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு

இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்றைய தினம் அதிமுகவின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதிமுக துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையாளராகவும் உள்ள நத்தம் விஸ்வநாதன் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

அந்த அறிவிப்பில், வேட்பு மனுத்தாக்கல் மார்ச்-18 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மார்ச்-19 பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். மார்ச் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. மார்ச் 21-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை மனுவைத் திரும்பப் பெறலாம். மார்ச் 26-ம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெற உள்ளது. மார்ச் 27-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு

இன்று காலை 10 மணி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்றே எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அவருக்கு பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்பதால் ஒருமனதாக தேர்வாக வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.