பொது சிவில் சட்டம்.. எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு.!

website post (3)

பொது சிவில் சட்டத்திற்கு அனைவரும் தங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என்று போபாலில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்தியப்பிரதேச முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று பாஜக பூத் நிர்வாகிகளிடம் பேசினார். 

அப்போது பேசிய அவர், முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லீம் பெண் குழந்தைகளுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்றும், பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் மக்களை தூண்டுகின்றனர் என்றும் பேசியுள்ளார். பொது சிவில் சட்டத்தை வைத்து எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியலை செய்து வருகிறார்கள். ஆகையால், பொது சிவில் சட்டத்திற்கு அனைவரும் தங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், எந்த மதத்தை சேர்ந்த மக்களும் சமூகத்தை சேர்ந்த மக்களும் சட்டத்தை எதிர்க்க கூடாது, ஊழல் செய்த எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதால், அவர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். எதிர்க்கட்சிகள் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்க்கக் கூடாது என்று பேசினார். 

பொது சிவில் சட்டம் பற்றி கருத்து தெரிவிக்க ஏற்கனவே குழு அமைத்து, அந்தக் குழு அறிக்கையை சமர்பித்தநிலையில், இரண்டாவது முறையாக சட்ட கமிஷன் கடந்த 14-ம் தேதி பொது சிவில் சட்டம் பற்றி கருத்து தெரிவிக்க அறிவிப்பு செய்தநிலையில், இன்று மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.