அண்ணாமலை செல்வது பாவ யாத்திரை.. அமித்ஷாவின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி.!

enn man

நேற்றைய தினம் ராமேஸ்வரத்தில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை தொடக்க விழாவில் உள்துறை அமைச்சர் பேசியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். 

NDA கூட்டணி கட்சியினர் பங்கேற்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' நடைபயணம் நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கியது. இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நடைபயண தொடக்க விழாவில் என்டிஏ கூட்டணியினர் பலர் பங்கேற்றனர். இந்த நடைபயண தொடக்க விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கிருஷ்ணசாமி, பார்வார்டு பிளாக் கட்சியிலிருந்து திருமாறன்ஜி, இந்து மக்கள் கட்சியிலிருந்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழில் பேச முடியாததற்கு மன்னியுங்கள்

முதலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விழாவிற்கு வருகை தந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை வரவேற்று பேசினார். பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது பேசிய அவர், "தமிழில் பேச முடியாததற்கு மன்னியுங்கள் என்று அமித்ஷா தொண்டர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நலத்திட்டங்களை கொண்டுவரவே!

இந்து மதத்தின் சின்னம் ராமேஸ்வரம். ராமநாத சுவாமி ஆசியுடன் தமிழகம் முழுவதும் அண்ணாமலை யாத்திரை போகிறார். இந்த நடைபயணம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணம். இந்த பயணம் தமிழின் பெருமையை காஷ்மீர் முதல் குமரி வரை கொண்டு செல்லும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான நடைபயணம்தான் இது. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் பிரதமர் மோடியின் செய்தியை கொண்டு செல்லவிருக்கிறார் அண்ணாமலை. 700 கி.மீ. தூரம் நடந்து சென்று 234 தொகுதிகளையும் சந்திக்க இருக்கிறார் அண்ணாமலை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டுவரவே அண்ணாமலை இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார் என்று பேசினார்.      

இந்தியா கூட்டணியினர் மீது குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி தமிழின் சிறப்பை உலகம் எங்கும் எடுத்துச் சென்றுள்ளார் என்றும், ஐ.நா. அவையில் தமிழின் பெருமையை குறித்து பேசினார் பிரதமர் மோடி என்றும், காசி தமிழ் சங்கம் மூலம் தமிழின் பெருமையை வடக்கில் பரப்பியவர் பிரதமர் மோடி என்றும் பேசினார். 12,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்தது காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி எனவும், இந்தியா கூட்டணியினர் வாக்கு கேட்டு சென்றால் ஊழல் பற்றி மக்களுக்கு நினைவுக்கு வரும் எனவும், இஸ்ரோ நிறுவனத்தில் ஊழல் செய்தவர்கள் அவர்கள் எனவும் இந்தியா கூட்டணியினரை குற்றம் சாட்டினார்.   

நாட்டை தீவிரவாதத்தில் இருந்து விடுவிக்க வேண்டுமா, வேண்டாமா? என தொண்டர்களிடம் அமித்ஷா கேட்டபோது, வேண்டும் வேண்டும் என கோஷமிட்டனர்.  காஷ்மீர் இந்தியாவுடையதா இல்லையா.? என்று தொண்டர்களிடம் அமித்ஷா கேட்டபோது, இந்தியாவுடையதுதான் என முழக்கமிட்டனர். யுபிஏ கூட்டணி அரசு தமிழ் மொழியின் பின்னடைவுக்குக் காரணம் என்றும், துல்லிய தாக்குதலை காங்கிரஸ் கூட்டணி எதிர்த்தது என்றும் குற்றம் சாட்டினார்.  

  தமிழ்நாடு அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு

சோனியாவுக்கு ராகுலை பிரதமராக்க ஆசை என்றும், ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சராக்க ஆசை என்றும், லாலுபிரசாத் யாதவுக்கு தேஜஸ்வியை முதலமைச்சராக்க விருப்பம் என்றும், மம்தாவுக்கு தனது மருமகனை முதல்வராக்க ஆசை ஆனால், மோடி மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார் என்று பேசினார். தமிழ்நாடு அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என்றும், கைது செய்யப்பட்டவரை அமைச்சரவையில் வைத்திருப்பது வெட்ககரமானது என முதலமைச்சர் ஸ்டாலினை குற்றம் சாட்டினார்.  

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஊழல் செய்கின்றனர்

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் ஸ்டாலின் ஏற்கமாட்டார். செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொன்னால் ரகசியங்களை போட்டு உடைப்பார் என்று தடாலடியாக பேசினார். தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் அம்பலமாகியுள்ளது, மின்துறையிலும் ஊழல் செய்துள்ள அரசு தமிழக அரசு என்று குற்றம் சாட்டினார்.   

முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாகின? என கேள்வி எழுப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஊழல் செய்கின்றனர் என்று பேசினார். யூபிஏ ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைத்தது என கேள்வி எழுப்பிய அமித்ஷா,  மத்திய அரசு தரும் நிதி மக்களுக்குச் சென்று சேரவில்லை என்று பேசினார். மெட்ரோ தவிர்த்து, பிற திட்டங்களுக்கு பாஜக அரசு ரூ.34,000 கோடி தந்துள்ளது.   தமிழ்நாட்டிற்கு 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

தமிழகத்திற்கு உங்கள் கூட்டணி ஆட்சி என்ன செய்தது

மின்னனு உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தியில் ரூ.1100 கோடி முதலீட்டை மத்திய அரசு இங்கு கொண்டு வந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 36 லட்சம் மக்களுக்கு நேரடி குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது என்றும், 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை திட்டத்தை பிரதமர் தந்துள்ளார் என்றும் பேசினார். 15 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமரின் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டதாகவும், ஸ்டாலின் அவர்களே, தமிழகத்திற்கு உங்கள் கூட்டணி ஆட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.  

கடந்த 9 ஆண்டுகளில் சாதி, ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிரான பணிகளை முடுக்கி உள்ளார் மோடி. காங்கிரஸ், திமுக கூட்டணிதான் தமிழக மீனவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு காரணம். இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதற்கு இதே கூட்டணிதான் காரணமாக இருந்தது என குற்றம் சாட்டினார். அண்ணாமலை யாத்திரையில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். 2024 தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து அதிக எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்" என்று பேசியிருந்தார். 

அமித்ஷாவின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி

இந்தநிலையில், இன்று சென்னையில் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "அமித்ஷா தொடங்கி வைத்திருப்பது பாத யாத்திரை அல்ல, 2002 ல் குஜராத்திலும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை, மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று யாத்திரை தொடங்கிவைத்திருக்கிறார். பாஜகவில் யாருடைய வாரிசும் கட்சியில் இல்லையா? பதவியில் உள்ள பாஜகவின் வாரிசுகளை பட்டியலிட்டால் பதவி விலகி விடுவார்களா? தமிழகத்திற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மத்திய அமைச்சர் அமித்ஷா வரவில்லை.

திராவிட கருத்துகளை எடுத்துச்சொல்லும் வாரிசுகள் உருவாகிக் கொண்டே இருக்கவேண்டும். மக்கள் மனதில் இருந்து பெரியார், அண்ணா, திராவிட கருத்தியல் மறைந்துவிடும் என நினைத்த எதிரிகளின் ஆசையில் மண் விழுந்துவிட்டது. நமது எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறார்களோ, நாமும் அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும். திமுக குடும்பக் கட்சி என கேட்டுக் கேட்டு புளித்துபோய்விட்டது. உதயநிதி காட்டிய ஒற்றை செங்கல்லை எண்ணி எதிரிகள் இன்னமும் புலம்பி கொண்டிருக்கின்றனர். அமைச்சர் உதயநிதியால் கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது" என்று பேசினார்.