கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு - யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் தண்டனையை உறுதி செய்த உயர்நீதி மன்றம்

gokulraj murder case

ஆணவகொலை வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதி தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சாகும்வரை சிறை தண்டனை 

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, உயர்நீதி மன்ற உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது.

யுவராஜ் தரப்பு மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

குற்றச்சாட்டுகள் நிரூபணம்

இந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது . உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, கோகுல்ராஜ் கொலைவழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாகவும், மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்றும் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கபட்ட வாழ்நாள் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்து உள்ளது.  

கண்ணீர் மல்க நன்றி கூறிய கோகுல்ராஜின் தாயார் 

“எந்த தவறும் செய்யாத என் மகனுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டது, அதற்கு நீதி வழங்கியதற்கும், இழைத்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்கியதற்கும் நீதிபதிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கோகுல்ராஜின் தாயார் சித்ரா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.