குரூப் 4 முடிவுகள் எப்போது - ட்விட்டரில் ட்ரெண்டான ஹேஷ்டேக் - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்.!

website post (17)

ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு - IV (தொகுதி IV)க்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம்  கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பததாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தேர்வு முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி ட்விட்டரில் #WEWANTGROUP4RESULT என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில், தேர்வாணையம் ஒரு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். டி.என்.பி.எஸ்.சி. OMR விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது.

இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் துணைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. 

ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.