மகளிர் பிரீமியர் லீக்கிலும் சொதப்பும் பெங்களூரு அணி..! 

WPL RCB vs GG

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் தொடந்து மூன்றாவது போட்டியிலும் தோல்வியுற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அணியும், குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியின்  தொடக்க ஆட்டக்காரர்கள் டங்க்லி 65 (28), ஹர்லீன் தியோல் 67 (45) ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆர்சிபி தரப்பில் மேகன் ஷட் நன்றாகத் தனது பந்துவீச்சைத் தொடங்கினார். ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஹீதர் நைட் தலா  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குஜராத் ஜெய்ண்ட்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 201/7 ரன்களை குவித்து அசத்தியது. 

பெங்களூரு பேட்டிங்

ஆர்சிபி அணிக்கு 202 ரன் இலக்காக நிர்ணயித்தது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா 18 (14) ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிவைன் 66 (45), எல்லிஸ் பெர்ரி 32 (25) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். க்நைட் அற்புதமாக  விளையாடி 11 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினார் . 

ஆட்டநேர முடிவில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடுமையாகப் போராடியும் ஆர்சிபி அணி  11 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு நெருக்கடியில் உள்ளது ஆர்சிபி அணி. ஆடவர் ஆர்சிபி அணி போல மகளிர் அணியும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது பெங்களூரு அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.