சில விளையாட்டு வீரர்களுக்கு அன்பும் மரியாதையும் கிடைப்பதில் மகிழ்ச்சி - சாக்‌ஷி மாலிக் 

sakshi wishes csk

மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்ததை அடுத்து இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 700 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பதக்கங்களை வீசுவோம்

இந்நிலையில், போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். ஹரித்வாருக்கு பேரணியாக சென்று மாலை 6 மணிக்கு நதியில் பதக்கங்களை வீசுவோம் எனக்கூறியுள்ளனர். இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் கழுத்துகளை அலங்கரிக்கும் பதக்கங்களுக்கு இனிமேலும் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். அதனை திருப்பி தரும் என நினைக்கும்போதே அந்த எண்ணம் எங்களை கொல்கிறது. சுயமரியாதையை இழந்துவிட்டு, வாழ்வதில் என்ன பயன் உள்ளது எனக் கூறியுள்ளார். மல்யுத்த வீரர்களின் இந்த அறிவிப்பு இந்த அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிஎஸ்கேவுக்கு வாழ்த்துகள்

இந்நிலையில், ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கேக்கு வாழ்த்துக்கள். குறைந்த பட்சம் சில விளையாட்டு வீரர்களாவது அவர்களுக்கு உரிய மரியாதையும் அன்பும் கிடைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது.” என பதிவிட்டுள்ளார்.