மத வன்முறையால் கலவரமான ஹரியானா - பின்னணி என்ன? 

manipur riots

ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பானது ஊர்வலம் நடத்தி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் ஊர்வலம் மேற்கொண்ட போது மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெடித்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும்,  45 பேர் கடுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வன்முறையில், 2 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டதையடுத்து அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. 

144 தடை உத்தரவு

இதன் காரணமாக அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூஹ் மாவட்டத்தில் தொடங்கிய இந்த வன்முறை குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதில் சிலர் கொல்லப்பட்ட நிலையில், வன்முறையை தடுக்கும் பணிகளில் ஈடுபட்ட போலீசார் பலரும் இதில் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையால் குர்கான், பல்வால், ரேவாரி மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.


 
இந்த மத ஊர்வலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊடுருவியதால் இந்த வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது. இரண்டு முஸ்லீம்களை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பஜ்ரங் தளத் தலைவர் மோனு மானேசர் ஊர்வலத்தில் பங்கேற்பதாக வதந்தி பரவியதே இந்த வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தால் ஹரியானா மாநிலம் முழுக்க பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ஹரியானா அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
 
கோவிலில் தஞ்சம் 

மேலும், நூஹ் நகரில் மொபைல் இணைய சேவைகளை ஹரியானா அரசாங்கம் இடைநிறுத்தம் செய்துள்ளது. அப்பகுதியில் தீவிர வகுப்புவாத பதற்றம் இருப்பதாக கூறி இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டு வன்முறை ஏற்பட்ட நிலையில், பலரும் அருகில் இருந்த கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.  ஹரியானா அரசு நூஹ் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைப் பராமரிக்க மத்திய அரசிடம் இருந்து கூடுதல் படையை அம்மாநில அரசு கோரியுள்ளது.   

இணைய சேவைகள் நிறுத்தம்

இந்த கலவரம் குறித்து ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், நுஹில் உள்ள சிவன் கோவிலில் இருந்த சுமார் 2,500 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டதாகவும், இவர்களில் பக்தர்களும், இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் அங்கு தஞ்சம் புகுந்ததாக கூறியுள்ளார். நுஹ் மற்றும் ஃபரிதாபாத்தில் புதன்கிழமை வரை செல்போன் இணைய சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனைக்குரிய வீடியோ

பல்லப்கரில் உள்ள பஜ்ரங் தள் ஆர்வலரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ ஆட்சேபனையை எழுப்பியுள்ள நிலையில், அந்த வீடியோவே இந்த கலவர தூண்டுதலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக  நூஹ் மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், நூஹ் மாவட்டம் அமைதிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், "ஹரியானா ஒன்று ஹரியானா மக்களும் ஒருவரே" என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளார். அதேபோல், மக்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கேட்டுக் கொண்டார். 

ராஜஸ்தானுக்கும் எச்சரிக்கை

அண்டை மாநிலமான ஹரியானாவில் நூஹ்வில் வன்முறையைத் தொடர்ந்து ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாரத்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் மிருதுல் கச்சாவா கூறுகையில், மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஹரியானாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் ஆட்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மணிப்பூரிலிருந்து மீள்வதற்குள்..?

கடந்த சில நாட்களாக மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் தீயாக பரவிய நிலையில், அங்கு நிகழ்ந்த வன்முறை மற்றும் பாலியல் அத்து மீறல்கள் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. அந்த தாக்கத்திலிருந்து மீள்வதற்குள் தற்போது ஹரியானாவில் விஷ்வ ஹிந்து பரிஷித் ஊர்வலத்தின் போது நிகழ்ந்த மதக்கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.