சூடுபிடித்த கர்நாடக களம்.. நேருக்கு நேர் மோதும் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு.! 

dxgfj

சூடுபிடித்த கர்நாடக களம்

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவுள்ளநிலையில், கர்நாடக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ளநிலையில், வேட்பாளர் பட்டியலை ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வருகிறார்கள். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் முனைப்புக் காட்டிக்கொண்டிருக்கக்கூடியசூழலில், அதிமுகவும் போட்டியிட போவதாக அறிவித்திருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தீவிர பிரச்சாரம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதனை மீட்டு பெறுவதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மாறி மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பு

கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டிடுவதற்கு பாஜக தொகுதிகளை ஒதுக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் வேட்பாளரை அறிவித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பெங்களூரு அருகேயுள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிட இருப்பதாக இபிஎஸ் அறிவித்திருக்கிறார். கர்நாடக 2023 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் ஒரு தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார் இபிஎஸ்.

ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பு

கர்நாடகா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளநிலையில், தற்போது கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை அறிவித்திருக்கிறார் ஓபிஎஸ். புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தநிலையில், அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் அம்மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறார்.

நேருக்கு நேர் மோதும் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னர், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றார். இதனால், இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவிற்கு கிடைத்தது. ஆனால், கர்நாடகா தேர்தலில் இரு தரப்பினரும் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கக்கூடிய சூழலில், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கிறதா இல்லையா என்பது குறித்த முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், கர்நாடக தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருக்கும் சுயேட்சை சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.