இந்தி திணிப்பு.. நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு.! தமிழகத்தின் தனித்துவம் காக்கப்பட்டது.!

website post (6)

 நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனத்தின் இந்தி திணிப்பு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷுரன்ஸில் அலுவல் மற்றும் வாடிக்கையாளார் தொடர்பு மொழியாக இந்தி மட்டுமே பேச, எழுத வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இந்தி திணிப்பிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததாவது,

முதலமைச்சர் கண்டனம்

"மக்கள் நலனுக்கான திட்டங்களை விட, மத்திய அரசு இந்திக்கு அளிக்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொருவரின் பங்கும் நிறைந்திருக்கிறது. நாட்டின் பன்முகத் தன்மையை நம்புகிறோம். நமது மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தியை திணிப்பதற்காக தங்களது மதிப்புமிக்க வளங்களை செலவழிப்பதில் மத்திய அரசு மிக கவனமாக உள்ளது. 

நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனத்தின் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பு சரியானது அல்ல; அந்த நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத ஊழியர்கள், மக்களுக்கு எதிரான இந்தச் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். போலவே, இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.  

இந்தியாவில் உள்ள மற்ற மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இரயில்வே துறை, தபால் துறை, வங்கி துறை, நாடாளுமன்ற உள்ளிட்ட துறைகளில் இந்தி மொழிக்கு கிடைக்கும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை, அன்றாடம் மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இந்தி திணிப்பை முற்றிலுமாக ஒடுக்க வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு, தி.மு.க. போராடிய வரலாறு இருக்கிறது. தொடர்ந்து போராடும்.

ஒவ்வொருவரும் வரி செலுத்துகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறோம். வேற்றுமையில்தான் நாட்டின் வலிமைமிக்க பாரம்பரியம் இருப்பதாக நம்புகிறேன்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். 

சு.வெ.கண்டனம்

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார். "இந்தி திணிப்பு; எல்லா மாநில மொழிகளையும் மதிக்கிறோம். நியூ இந்தியா இன்சூரன்ஸ்,  A 100%, B 90%, C 55% என்று மாநிலங்களை வகைப்படுத்தி இந்தி அமலாக்க இலக்கு போடும் போது இம் மூன்று வகையிலும் வராத தமிழ்நாட்டில் இந்தி அமலாக்க செல் கலைக்கப்படும் என்று உத்தரவிடுங்கள். அதுதான் அலுவல் மொழிச் சட்டம் 1 (ii) கூறுவது. இதனை பின்பற்றவில்லையென்றால் அது “ நியூ இந்தியா இன்சூரன்ஸ்” அல்ல “இந்தி இந்தியா இன்சூரன்ஸ்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

மன்னிப்பு கேட்ட நியூ இந்தியா அஷூரன்ஸ் 

இந்தநிலையில், தமிழகத்திலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம். அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அனைத்து மாநில மொழிகளுக்கும் மதிப்பளிப்பதாகவும், யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும்" நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

தமிழகத்தின் தனித்துவம் காக்கப்பட்டது

இதையடுத்து, அலுவல் மொழி விதிகளில் தமிழகத்தின் தனித்துவம் காக்கப்பட்டிருப்பதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். "இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி.. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மன்னிப்பு! “தவறுதலாக நாங்கள் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தால் மனதார மன்னிப்பு கோருகிறோம்" என்று அறிவிப்பு. அலுவல் மொழி விதிகளில் தமிழ்நாட்டுக்கு உள்ள  தனித்துவம் காக்கும் பயணத்தில் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.