12 மணி நேர வேலை மசோதாவும்.. திராவிட மாடலும்..

dravida model

பல ஆண்டு கால வரலாற்றுச் சம்பவங்களை தீயிட்டு கருக்கியிருக்கிறது ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு. நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 12 மணி நேர வேலை திறுத்த மசோதாவை கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நிறைவேற்றி இருப்பது வரலாற்றில் ஒரு கருப்பு பக்கமாகவே பார்க்கப்படும். தமிழ்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்திற்கான போராட்டங்களும் தியாகங்களும் ஈடு இணையற்றது. அப்படிப்பட்ட வரலாற்றை மறந்து உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சூழலை ஏற்படுத்திவிட்டது இந்த திராவிட மாடல் அரசு.

உழைப்புச் சுரண்டல், குறைந்த சம்பளம், ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகரில்லாத ஊதியம் என்று வர்க்க முரண்பாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்குண்டு கிடந்த உழைப்பாளர் வர்க்கத்தை, 8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற சம்பளம், ஆண் பெண் என வேறுபாடில்லாத ஊதியம் என தொழிலாளர்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தந்த சமூகம் இந்த சமூகம். தொழிலாளர்களை கொண்டாடும் விதமாக முதன்முதலாக சென்னையில் மே தினம் கொண்டாடப்பட்டது சிந்தனைச் செல்வர் சிங்கார வேலரால். இன்று இந்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிற மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தையால் மே தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா மார்க்சிஸ்ட்டுகளின் வலியுறுத்தலால், மே தின பூங்கா என அறிவித்தது இதே கலைஞர் ஆட்சியில். இதைவிட கூடுதலாக, ஒரு காலத்தில் 8 மணி நேர வேலையை 6 மணி நேரமாக குறைக்கப்படும் என்று பேசியவர் கலைஞர் அவர்கள். தந்தை எட்டடி பாய்ந்தார் மகன் பதினாறு பாய்கிறார் என்று மு.க.ஸ்டாலினை புகழ்ந்து வந்தார்கள். அது இப்போதுதான் புரிகிறது, கலைஞர் 6 மணி நேர வேலை என்றார் மகன் 12 மணி நேர வேலை என்கிறார்.

இந்த மசோதாவில் வாரத்தில் நான்கு நாள் 12 மணி நேர வேலை, 3 நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்கிறார்கள். இது உழைப்புச் சுரண்டல் அல்லவா? இது மனிதனின் சிந்தனையையும் உடல் உறுப்புகளையும் பாதிக்காதா? இது மனிதனின் சராசரி வாழ்நாளை குறைக்காதா? என்றெல்லாம் இவர்கள் சிந்தித்தார்களா என்று தெரியவில்லை. 8 மணி நேர வேலையில்கூட கூடுதலாக, ஒன்பது மணி நேரமோ பத்து மணி நேரமோ நிறுவனங்களில் இன்றும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் உழைப்புச் சுரண்டலே. இந்தச் சூழலில் 12 மணி நேர வேலை என்றால் அது கட்டாயம் 12 மணி நேரத்தில் முடிக்கப்பட மாட்டாது. அப்போதும் 12 மணி நேர வேலை என்பது பதிமூன்றோ பதினான்கோ ஆகும். 

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் 8 மணி நேர வேலையைத் தவிர்த்து அவனுக்கான, சமூகம், அரசியல், சொந்தபந்தம், தூக்கம் இவையெல்லாம் ஒண்றினைந்துதான் மனிதனின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. 8 மணி என்பது 12 மணி நேரமாகும்போது உடல் சோர்வு, மன அழுத்தம் இதனால், சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்வான் இதன்மூலம், அவனது தூக்கம் களையும் இதனால் உடல் ரீதியிலான பாதிப்பு ஏற்படும். இப்படி அவனது வாழ்க்கையே சீரழிந்துபோகும் சூழல் ஏற்படும்.

எட்டு மணி நேர பணி முடிந்ததும் தானாக இயந்திரங்கள் மூடப்பட்டு வீட்டுக்கு கிளம்புங்கள் என்று சொல்லும் அளவிற்கு இரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உழைப்புச் சுரண்டலுக்கெதிரான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறிப்பாக, தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் இதுபோன்ற தொழிலாளர் நலனுக்கான திட்டங்களை வகுக்காமல், பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நிற்காமல், கார்ப்பரேட்டுகளின் பக்கம் நின்று தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவது எந்த விதத்தில் நியாயம்.

இதே மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்த இதே மு.க. ஸ்டாலின் அவர்கள், தற்போது தன்னுடைய ஆட்சியில் இந்த மசோதாவை நிறைவேற்றி இருப்பதை எப்படி பார்ப்பது. சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம் என்று மேடை ஏறியபோதெல்லாம் மக்களிடம் ஒப்புவித்த இதே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே சொன்னதை தற்போது மாற்றி செய்திருக்கிறார் என்பதை நாங்கள் எப்படி பார்ப்பது. இது மக்களுக்கான அரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை தெர்வித்து வந்த இதே அரசு தற்போது கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக மாறுவதை நாங்கள் எப்படி பார்ப்பது. விடியல் ஆட்சியில் நிறைவேற்றி இருக்கிற 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பபெற்று, தொழிலாளர்களின் வாழ்க்கையில் விடியலைக் காண காத்திருக்கும் பாட்டாளிகள்...