கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை.. திங்கட்கிழமை தோறும் அறிக்கை தர வேண்டும்.. முதலமைச்சர் உத்தரவு.!

cm order

சர்ச்சையான கள்ளச்சாராய விவகாரம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாக 15 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுவொருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர், நிர்வாகத்திறமையின்மையால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது என்று ஆளும் அரசை குற்றம் சாட்டினர். 

தேடுதல் வேட்டை

இந்த சம்பவத்தையடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை கண்டறிய   தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட உத்தரவு பிறப்பித்தார். சோதனையின் முடிவில், 247 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், 121 பேர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், 5,901 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 1106 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. 

கள்ளச்சாராயம் அல்ல விஷச்சாராயம்

இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, நேற்றைய தினம், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் அது அல்ல, அது மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்ற புதிய தகவலை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். 

முதல்வர் ஆலோசனைக் கூட்டம்

இந்தநிலையில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் அமலாக்கப் பிரிவில் நியமிக்க வேண்டும்

கூட்டத்தில் பேசியதாவது, கள்ளச்சாரயம் மற்றும் போதைப் பொருட்களை விற்பவர் மீது குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில்  நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

திங்கட்கிழமை தோறும் அறிக்கை தர வேண்டும்

மேலும், பொதுமக்களிடம் புகார்களைப் பெற்று உடனடியாக அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் எரிசாராயம், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். மெத்தனாலை விஷச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும். மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாட்ஸ்அப் எண்களை மக்களுக்கு தெரிவிக்கவும், மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். புகார்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தோறும் முதல்வரின் அலுவலகத்திற்கு அறிக்கை தர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.