திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை.! 

it raid

திமுக-வுக்கும் ஜி ஸ்கொயர்-க்கும் தொடர்பு!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தி.மு.க தலைவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு  ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் தி.மு.க-வுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அண்ணாமலை வெளியிட்ட இந்த திமுக ஃபைல்ஸ்  அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. 

ஜி ஸ்கொயர் விளக்கம்

இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இதனை சட்டரீதியில் சந்திக்க தயார் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல என்றும்,  நாங்கள் தவறான முறையில் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்பவைக்க ஜோடிக்கப்பட்ட பொய் தகவல் என விளக்கம் அளித்தது. 

அதிரடி சோதனை

இந்தநிலையில், நேற்றைய தினம் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ மோகன் வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

2-வது நாளாக திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் சோதனை

இதனைத்தொடர்ந்து, ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். நேற்றைய தினம் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டில் சோதனை மேற்கொண்ட நிலையில், இன்றும் அவரது வீட்டின் மேல்தளம் கீழ்தளம் மற்றும் அவரது கார் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது சென்னை மட்டுமல்லாது கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. 

அண்ணாநகர் மோகன் கார்த்திக் வீட்டில் இன்று காலை 9 மணியளவில் இருந்து வருமான வரித்துறையின் மண்டல அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் அவரது வீட்டில் உள்ள கணினி மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். சோதனை முடிவில் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டால் விசாரணைக்கு அழைக்க இருப்பதாக விருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சென்னை உட்பட தெலுங்கான, கர்நாடகா மாநிலங்களில் சோதனை நடைபெற்று வரும் நேரத்தில் முழுமையாக சோதனை முடிந்தபிறகு, ஒட்டுமொத்தமாக கைப்பற்றக்கூடிய ஆவணங்கள் குறித்த தகவல்களை டெல்லி அலுவலகத்திலிருந்து கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.