IND vs AUS Test: வெற்றிபெறும் முனைப்பில் ஆஸ்திரேலியா..!

Indian Test Team

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பிரமாண்ட வெற்றிபெற்றது. 

மூன்றாவது டெஸ்ட் 

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்றாம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை தொடங்கிய முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தடுமாறிய இந்தியா

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா மற்றும் சுபம்கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5 ஓவரின் கடைசிப் பந்தில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் குன்னனென் பந்துவீசும்போது, ரோகித் சர்மா ஸ்டெம்பிட் முறையில் அவுட் ஆனார். குன்னனென் மீண்டும் 7வது ஓவரை வீசிய போது சுபம்கில்  ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் புஜாராவும் 4 பந்துகளுக்கு ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 33.2 ஓவர்களில் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. 

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 

பின்னர் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரரான டி.எம்.ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கவாஜா நிதானமாக ஆடி 147 பந்துகளுக்கு 60 ரன்கள் எடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது. ஹேன்ச்ஹோப் மற்றும் கிரீன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலயில் உள்ளது. இன்னும் 4 நாட்கள் மீதமுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறவே வாய்ப்புள்ளது.