3வது நாளிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..! 

India cricket

ஆஸ்திரேல்கியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அஸோசியேசன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்யத் தொடங்கியது. 

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக, டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஹா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்திய அணி சார்பில் முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். மொத்தம் 5 பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து டேவிட் வார்னர் போல்ட் ஆக, இட்ரண்டாவது ஓவரில் வெறும் 3 பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து, முகமது சிராஜ் ஓவரில் உஸ்மான் எல்.பி.டபூல்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் 3வது மற்றும் நான்கவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மர்னுஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கேற்ற பொறுமையான ஆட்டத்தை ஆடினர். இதில் 123 பந்துகளுக்கு 49 ரன்களில் மர்னுசும், 107 பந்துகளுக்கு 37 ரன்களில்  ஸ்டீவ் ஸ்மித்தும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் மொத்தம் 177 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்து ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 47 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதைப்போல ரவிச்சந்திரன் அஸ்வின் 15.5 ஓவர்களை வீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது ஷமி மற்றும் முகமது ஷிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். 

இந்தியா முதல் இன்னிங்ஸ்

இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் ஷர்மா 56 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மூன்றாவது இடத்தில் களமிறங்கிய அஸ்வின் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்களில், ரோகித் ஷர்மா பொறுமையாக விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9வது சததை பதிவு செய்தார் ரோகித் சர்மா, மறுபுறம், அஸ்வின் 23, புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யகுமார் 8 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய ரவீந்திர ஜடேஜா தனது பொறுமையான ஆட்டத்தால் கேப்டன் ரோகித்திற்கு துணையாக நின்று ஆடினார். மொத்தம் 212 பந்துகளுக்கு, 120 ரன்கள் எடுத்திருந்த ரோகித், பட் கம்மின்ஸ் பந்தில் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிட பரத் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அகஸர் பட்டேல் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆஸ்திரேலிய அணிக்கு கௌரவமான இலக்கை வைக்க வேண்டும் என்பதற்காக ஆடிய ஜடேஜா தனது அரை சதத்தை கடந்தார். ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடிய அக்சர் பட்டேலும் அரை சதம் அடித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 321 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழதிருந்தது. 

மூன்றாம் நாள் ஆட்டம்

மொத்தம் 5 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டியின் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் வழக்கம் போல தொடங்கியது. ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேல் களத்தில் இருந்தனர். இருவரும் சதம் அடித்து, அணியின் ஸ்கோரை 600 அல்லது 700 வரை கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 120, அக்சர் பட்டேல் 84, ஜடேஜா 70 ரன்கள் குவித்திருந்தனர். இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். 

இரண்டு இலக்கத்தில் சுருண்ட ஆஸ்திரேலியா

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியாவிட்டாலும், ஆட்டத்தை சமன் செய்யலாம் என வியூகம் வகுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்கம் முதலே, தனது பந்து வீச்சால் எதிரணி வீரர்களை நிலைகுலைய செய்தார். தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 12 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் மொத்தம் 32 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்கஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தி 70 ரன்களையும் குவித்த ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.