IND vs AUS: மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா..! 

IND vs AUS

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 

ஒருநாள் தொடர் 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வான்கடேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. நேற்று (19-03-2023) இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியா பேட்டிங்

முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணி  பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சொதப்பினர் . ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் பந்துகளை ஸ்விங் மற்றும் பவுன்ஸ் செய்தனர். இதனை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோலி 31 (35), அக்சர் படேல் 29 (29) ஆகியோர்கள் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மிகவும் மோசமடைந்து. இறுதியில் இந்திய அணி வெறும் 26 ஓவர்களில்  117 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி  ரோஹித் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

எளிதில் வெற்றி

50 ஓவர்களுக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார். மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில்  66 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலிய அணி வெறும் 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை  பெற்றது. 

சேப்பாக்கத்தில் கடைசிப் போட்டி

மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா என இரு அணிகளும் தலா ஒரு வெற்றிபெற்று சமனில் உள்ளது. இந்நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்தப் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டதால் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டிற்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியாவும், டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியாவும் களமிறங்கும் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.