சர்வதேச மகளிர் தினம் - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து.!

cared

இன்றைக்கு (மார்ச்-08) தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிய மகளிர் தினத்தில் தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக இந்த தேசிய மகளிர் தினம் 2023 அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது. சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மநீம தலைவர் கமல்ஹாசன்

பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து.


நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்

பெண்களைப் போற்றிடும் இத்திருநாளில் பெண்களை அதிகாரப்படுத்துவதே அவர்களது அடிமைத்தளை உடைக்க இருக்கும் முதன்மை வாய்ப்பென்பதை உணர்ந்து, பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

விசிக. தொல்.திருமாவளவன்

பாலினப் பாகுபாடுகள் தகர்த்தெறிவோம்! பாரெங்கும் மகளிர்உரிமைகள் நிலைநாட்டுவோம்! மகளிர் உரிமைப் போராளிகள் யாவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள். 

அமமுக தலைவர் டிடிவி தினகரன்

அன்பும், அறமும் மனிதர்களிடம் தழைத்தோங்க உயிர் கொடுக்கும் பெருமைமிகு தாய்மையை எந்த நாளும் போற்றுவோம் என்ற செய்தியுடன் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலக மகளிர் தினத்தன்றில் மட்டுமின்றி என்றென்றும் பெண்களைப் போற்றினால் மட்டுமே இந்த உலகம் அன்புடனும், அறத்துடன் திகழும் என்பதை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ஆக்கும் சக்தியான உலகெங்கும் வாழும் மகளிருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவதே மகளிரை அடிமைப்படுத்தும் செயல் தான் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

வி.கே.சசிகலா

அதேபோல் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்களுடைய போராட்டங்களின் வலி நிறைந்த வாழ்க்கையை இந்த மகளிர் தின நன்னாளில் நினைத்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.