அயர்லாந்து அணிக்காக விளையாட செல்கிறாரா சஞ்சு சாம்சன்? 

Sanjusamson

 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு விளையாட வருமாறு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்புவிடுத்துள்ளது. 

கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சஞ்சு சாம்சன். இவர் கேரள அணியின் கேப்டனாகவும், ஐ.பி.எல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் இவரை தொடர்ந்து நிராகரிப்பதாக ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். சஞ்சு சாம்சானுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டால் தோனியைப் போல சிரந்த வீரராக வலம் வரமுடியும் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். 

ஆனால் சஞ்சு சாம்சன் டி-20 உலக கோப்பை தொடரில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை, அதன் பிறகு நடைபெற்ற நியூசிலாந்து எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றாலும் ஆடும் லெவனில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதுமட்டும் இல்லாமல் தற்போது நடைபெற்றுவரும் வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. உலககோப்பை தொடருக்கு முன்னதாக தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான தொடரில் மட்டுமே சஞ்சு சாம்சன் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அயர்லாந்து அழைப்பு

இந்நிலையில் தங்கள் நாட்டிற்கு குடிபெயர்ந்து, அயர்லாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாட வரும்படி அநாட்டு கிரிக்கெட் வாரியம் சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அயர்லாந்திற்காக சஞ்சு சாம்சன் விளையாடும் பட்சத்தில் அவர் அனைத்து போட்டிகளிலும் கண்டிப்பாக இடம்பெறுவார் எனவும் அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. 

சஞ்சு சாம்சனின் பதில்

ஆனால் சஞ்சு சாம்சனோ, இந்திய அணிக்காக விளையாடவே விரும்புவதாகக் கூறி, அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்கும் பட்சத்தில் அவரால் இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாட முடியாத சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.