ஐடி ரெய்டு.. டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரரின் வீட்டில் சிக்கிய ரொக்க பணம்.! 

it

40 இடங்களில் சோதனை

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் சோதனை நடத்தினர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும், அரசு டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  

இரண்டாவது நாளாக தொடரும் சோதனை

வெளிமாநிலங்களில் அதாவது கேரள மாநிலம் பாலக்காட்டிலும், ஐதராபாத் நகரிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும் நேற்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்தநிலையில், இரண்டாவது நாளாக இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் இல்லங்களில்  சோதனையானது நடைபெற்று வருகிறது. கரூரில் நேற்று பிரச்னை ஏற்பட்ட நிலையில் இன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் சோதனை

இரண்டாவது நாளான இன்று கரூர், கோவை, பொள்ளாச்சி, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரிச் சோதனை நடைபெற்று வருகிறது. குளித்தலையில் பிரேம்குமார் என்பவர் வீட்டில் 10-க்கும் அதிகமான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோவையிலும் 2-வது நாளாக வருமானவரிச் சோதனை தொடர்ந்து வருகிறது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான மறுவாழ்வு மைய அலுவலகம் மற்றும் கோழி பண்ணையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிய ரொக்க பணம்

நேற்றைய தினம் நடந்த சோதனையில் எந்தவொரு ஆவணங்களோ, பணங்களோ கைப்பற்றப்படாதநிலையில், இன்று நடைபெற்று வருகிற சோதனையில்,
டாஸ்மாக் ஒப்பந்ததாரரிடம் ரூ.2.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரோட்டைச் சேர்ந்த டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரரான சச்சிதானந்தம் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் வாகன ஒப்பந்தப் பணியை சச்சிதானந்தம் செய்து வருவதாக தகவல் சொல்லப்படுகிறது.